×

மனதின் ஆற்றலை வளரச் செய்வதே உண்மையான கல்வி!

“உங்களால் முடியும் என்று நம்பினால் முடியும்! முடியாது என்று நம்பினால் முடியாது. நீங்கள் நினைப்பதே சரி!” என்ற ஹென்றி ஃபோர்டு, இளமையில் இயந்திரத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், பெட்ரோலில் இயங்கும் நீராவி பம்பை வாகனங்களில் பொருத்தி, கார் உருவாக்கி, ஓட செய்து வெற்றி பெற்றார். இந்த மாபெரும் வெற்றிக்கு அடித்தளம் குழந்தைப்பருவத்தில் ஹென்றி , டைம்பீஸ் ஒன்றை பிரித்து மீண்டும் சேர்க்க தொடங்கியதில் ஆரம்பித்தது என்றால் நம்பிதான் ஆக வேண்டும்! ஒருமுறை நான்காம் வகுப்பு மாணவர் ஒருவரின் பெற்றோர்கள் என்னை காண வந்தனர். பெற்றோர்கள் அரசு பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களின் கல்வியில் அல்லது நலனில் அக்கறை கொள்ளும் நடைமுறை குறைந்துள்ள இந்த காலத்தில், அவர்களின் வருகை வியப்பூட்டியது!

‘‘போன வாரம் டேப் ரெக்கார்டரை பிரிச்சு போட்டுட்டான் சார். இன்ன வரை பாடலை. எங்க தாத்தா காலத்தில் வாங்கியது. அவர் ஞாபகமா வச்சிருந்தது. இப்படி எதையாவது நோண்டிகிட்டே இருக்கான் . எவ்வளவு திட்டினாலும் அடிச்சாலும் அறிவு வர மாட்டேங்குது. அதான் டீச்சர் கிட்டேயும், ஹெச்.எம். உங்க கிட்டேயும் சொல்லி கண்டிக்க சொல்லலாம்ன்னு வந்தோம்” என தந்தை மாணவனின் மீது குறைகளை அடுக்கினார். நான் சிரித்தேன். அவர்கள் என்னை வித்தியாசமாக பார்த்தனர். “குழந்தைகள் என்றால் அப்படி தான் இருப்பார்கள். அவர்கள் இயல்பில் வளர விடுங்கள். அவர்களுக்கு என்று கனவு உள்ளது. நீங்கள் குழந்தைகளின் செயல்களுக்கு துணை நில்லுங்கள். அவர்களின் வளர்ச்சியை கண்டு அதிசயுங்கள். இவன் பெரிய இன்ஜினியராவான்.” என்றேன்.

அதன் பின் வெகு சீரியசாக அம்மாணவனின் தாயார், “சார், அவுங்க மாமா, அமெரிக்காவில் டாக்டரா இருக்கான் சார். இவனை அவுங்க மாமா மாதிரியே டாக்டருக்கு படிக்க வைக்கணும்னு நினைக்கிறோம் சார். இவன் என்னடான்னா வீட்டுக்கு வந்து படிக்காம, எதையாவது பிரிப்பதும் சேர்ப்பதுமாகவே இருக்கான். கொஞ்சம் கண்டிச்சு வைங்க சார். இல்லைன்னா அடுத்த வருஷம் இவனை ஹாஸ்டல்ல போட்டா தான் சரியா வருவான்” என்று மிரட்டினார். இதுதான் அனேகமான குடும்பங்களில் நடக்கும் நிகழ்வு. குழந்தைகளுக்கென்று கனவு உள்ளது என்பதை மறந்து விடுகின்றோம். குழந்தைகளை , அவர்கள் இயல்பில் வாழ விடுவதில்லை. குழந்தைகள் மீது நம் கனவுகளை திணிக்கின்றோம். பெற்றோர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை செயல்படுத்தும் கருவிகளாக குழந்தைகளை உருவாக்கி கொண்டு இருக்கின்றார்கள். வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் தம் நிறைவேறாத கனவுகளை குழந்தைகளின் மீது திணித்து , அக்குழந்தைகளின் நிகழ்கால கனவுகளுக்கு கல்லறை எழுப்பி கொண்டிருக்கின்றோம். பொதுவெளியில் வாய் நிறைய குழந்தைகளை கனவு காண செய்யுங்கள் என்று கூறுகின்றோம். அதுவும் அப்துல்கலாம் கூறியது போல் விழித்து கொண்டே கனவு காண செய்ய வலியுறுத்துகின்றோம். ஆனால் , அக்கனவுகள் குழந்தைகளின் கனவுகளாக இருக்க வாய்ப்புகளை வழங்குவதில்லை.

பள்ளிக்கூடங்களும் பெற்றோர்களின் செயல்களுக்கும், அவர்களின் நிறைவேறாத கனவுகளுக்கு உரமிடும் வகையிலும் குழந்தைகளின் எல்லா கனவுகளையும் புதைத்து, அதிக மதிப்பெண், ஆயிரத்து நூற்று ஐம்பதுக்கு மேல் மதிப்பெண் என்ற திட்டம் வகுத்து குழந்தைகளுக்கு மன கஷ்டத்தை கொடுக்கின்றன. பள்ளிக்கூடங்கள் பெற்றோர்களின் கனவுகளை சுமக்கும் இயந்திரத்தை பழுது நீக்கும் தொழிற்கூடங்களாகவே உள்ளன என்பது நிதர்சனமான உண்மை.
உண்மையான கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பதல்ல. மனதின் இயல்பான ஆற்றலை வளரச் செய்வதே உண்மையான கல்வி என்கின்றார் சுவாமி விவேகானந்தர். ஆனால், நாம் நம் குழந்தைகளிடம் உள்ள இயல்பான ஆற்றலை வளர விடுகின்றோமா? குழந்தைகள் எல்லையற்ற அறிவுச் சுரங்கங்களாக உள்ளார்கள். அதனை வெளிப்படுத்துவதற்கு, பெற்றோர்கள் தங்களின் சொந்த ஆசைகளை, பிரியங்களை குழந்தைகளின் மீது திணிக்காமல், குழந்தைகளின் உண்மையான ஆன்மாவை செயல்பட அனுமதிக்க வேண்டும். குழந்தைகளை ஒருபோதும் குறை கூறாதீர்கள். அது அவர்களை பெரிதும் பாதிக்கும். குழந்தைகளுக்கு சங்கடமாக இருக்கும் விஷயங்களை செய்யாதீர்கள். மனசங்கடத்திற்கு உள்ளாக்காதீர்கள். வாழ்நாள் முழுவதும் குழந்தைகளால் ஜீரணிக்க முடியாத , உள்ளிருந்து தொந்தரவு தரக்கூடிய விஷயத்தை ,செய்தியை திணிக்காதீர்கள். கல்வி என்பது வாழ்க்கையை வளப்படுத்துகின்ற ,
மனிதனை உருவாக்குகின்ற , குணத்தை மேம்படுத்துகின்ற, கருத்துகளை ஜீரணம் செய்ய தக்க விஷயமாகும்.

எண்ணம் தான் வாழ்க்கை. நம் குழந்தைகளை அவர்களின் எண்ணப்படி வாழ அனுமதிப்போம். குழந்தைகள் நினைப்பதை செய்ய துணை நிற்போம். முடிந்த வரை அவர்களுக்கு வாய்ப்பை வழங்குவோம் அல்லது அதனைவிட சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்போம். ஒருபோதும் நம் குழந்தைகளின் இயல்பை கெடுக்க வேண்டாம். ஆகவே, நாம் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் கல்வியை வழங்குவோம்.
– க.சரவணன்

The post மனதின் ஆற்றலை வளரச் செய்வதே உண்மையான கல்வி! appeared first on Dinakaran.

Tags : Henry Ford ,Dinakaran ,
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...